தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும்.
குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.
ஆமணக்கு வேலி
மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும்.
தோலில் கட்டி மற்றும் புண்கள் ஏற்பட்டால் அவற்றின் மீது ஆமணக்கு செடியின் இலைகளை வதக்கி கட்டினால் அவை உடையும், வலி குறையும். வேர்ப்பட்டை பேதி மருந்தாகவும், தோல் வியாதி மருந்தாகவும் பயன்படும்.
கொட்டைமுத்து, காய்கள்
ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள். பச்சை நிறமாக இருக்கும் காய்கள் முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும்.
இவ்விதைகளையே 'ஆமணக்கு முத்து' என்பர். விதைகள் நச்சுச்தன்மை கொண்டவை. இரண்டு விதைகளை தின்றால் கூட மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பின்னர் நச்சு கலப்பதில்லை.
குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்
விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பேதியைத் தூண்டும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதன் மருத்துவப்பயன் தெரியவந்துள்ளது. குழந்தைகளை அடிக்கடி இந்த எண்ணெயை குடிக்கச்செய்து வயிற்றினை சுத்தமாக வைப்பர். குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மார்பகங்களின் மீது விளக்கெண்ணெயை தேய்த்து விட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர்.
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.
பண்டைய பயன்பாடு
ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. விளக்கெரிக்க இவ்வெண்ணெயைப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் என்று பெயர் வந்ததாக பண்டித அயோத்திதாசர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் சமண முனிவர்கள் விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார்.
இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர். இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரீஸ்' ஆகும்.
No comments :
Post a Comment