‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் விதவிதமான அருமையான தகவல்கள் இருக்கின்றன.
மூலிகையின் பெயர் -: கோரை.
தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.
தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.
பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.
வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass, nut sedge, nut grass, purple nut sedge, red nut sedge முதலியன.
இதில் சிறு கோரை, பெருங்கோரை என இரு வகையுண்டு.
மருத்துவப்பயன்கள்:
கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும். இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும். (நன்றி : மூலிகை வளம் தளம் ) கோரை புற்களை கொண்டு பாய் தயாரிக்கின்றனர், அது மட்டுமே மருத்துவ குணம் கொண்டதா என்றால் இல்லை…..
அந்த காலத்தில் அதை நெய்வதற்கு இருந்த நூல் கூட மருத்துவ குணம் கொண்டது தெரியுமா ? ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் ‘தரஸ்கு’ (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும். இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள். இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார்.
வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்.
முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.
இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.
இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இதே போல இளம் பனை ஓலையை வெட்டி, அதையும் மட்டைப்பகுதியில் இரண்டாக வெட்டிப்பிளந்து (முழு ஓலையையும்) விசிறி மாதிரி விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்குப் பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்துவிடும்.
ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருப்பவர்கள் இத்தகைய பனை ஓலையைப் பயன்படுத்துவார்கள். பனையின் குருத்து ஓலையை வெட்டி, அதைப் பக்குவமாக நீரில் நனைய வைத்து ஓலை இதழ்களை மட்டும் கிழித்தெடுத்து ஒருவிதப் பாய்களை முடைவார்கள்.
இந்தப் பனை ஓலைப் பாய்களைச் சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். குருத்து ஓலை இலக்குகளால் (இதழ்களால்) நெய்யப்படும் இந்தப் பனை ஓலைப் பாய்களும் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள் தாழை மடல்களால் பின்னப்பட்ட பாய்களில் படுப்பார்கள். இது மெத்தை போன்று படுப்பதற்கு மிகவும் சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். தாழை மடல்களை வெட்டித் தண்ணீரில் ஊறவைத்து, அதை இலக்கு (இதழ்)களாகப் பிரித்து அதிலிருந்து தாழம்பாய்களைப் பின்னுவார்கள்.
நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து வந்து மிதமாகக் கையை வைத்து, அவைகளைப் பனை நாரால் கோத்து ஒருவிதப் பாயை உருவாக்குவார்கள். இதற்கு நாணல் பாய் என்று பெயர்.
இதே நாணலை வைத்து, மழைக்காலத்தில் நனையாமல்
போட்டுக் கொள்ள ‘கொங்காணி’களையும் இந்த நாணல் தட்டையில் இருந்து தயாரிக்கிறார்கள். நாணல் பாய் மெத்தைபோல் படுப்பதற்கு ‘மெத்,மெத்’ என்று சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
தொழில்நுட்பம் வளர்ந்த பின்தான் கோரைப்பாய் நெய்தார்கள். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.
இதுவரை, நாம் பார்த்த பாய்கள் எல்லாம், தென்னை, பனை, தாழை, நாணல், கோரைப்புல் போன்ற தாவரங்களால் தயாரிக்கப்பட்டவைதான்.
தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதால் இந்தப் பாய்களில் படுத்து எழுந்தால் உடலின் வெப்பம் குறையும். உடல் வலியும் போகும். ஒரு விதத்தில் மறைமுகமான மருத்துவக்குணமாகும் இது.
இன்றைக்கு நமக்கு பன்னாட்டு நுகர் கலாச்சாரத்தால் கிடைக்கிற போம் மெத்தைகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் மேலும் அலுப்பை ஏற்படுத்தும்.
மேலே கண்ட பாய்கள் பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு அவையாவும் ஒருவிதை இலைத் தாவரங்கள் என்பதையும் நாம் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். ஒற்றை விதை இலைத்தாவரங்கள் (புல் முதல் பனை வரை) யாவும் குளிர்ச்சியைத் தருவன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள். அவர்கள் வாழும் பகுதிகளில் ஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இதற்கு சூரிக்கத்தி என்ற இருபுறமும் கூரான கத்தி பயன்படுத்தப்படும். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக (கட்டுகளாக) கட்டி வெயிலில் காய வைப்பார்கள்.
பிறகு அக்கட்டுகளை ஆற்றுநீரில் அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பார்கள். இப்போது இரண்டாகக் கீறப்பட்ட கோரைகள் சற்று உப்பி இருக்கும். எனவே அதை மீண்டும் இரண்டாக சூரிக்கத்தி வைத்துக் கீறுவார்கள்.
பிறகு அக்கோரைகளை முடிகளாக(கட்டுகளாக) முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். காய்ந்த கோரைகளை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்துக் கொள்வார்கள். மொத்தக் கோரையில் பத்தில் ஒரு பங்குக்கோரையைப் பிரித்து எடுத்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றிக்கொள்வார்கள்.
ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் ‘தரஸ்கு’ (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும்.
இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள். இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார். இந்த இரண்டு மூலப் பொருள்களையும் நெசவாளர்கள், இயற்கைத் தாவரங்களில் இருந்து (கோரைப்புல், கற்றாழை) எளிய உழைப்பு மூலம் பெற்றுக் கொண்டார்கள்.
இனி, பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், இருந்து நெசவு செய்யச் சிறிய நீள்வச பெஞ்சுகள் முதலிய எளிய கருவிகள்தான் தேவை.
இப்படித் தென் மாவட்டங்களில் இயற்கையாய்க் கிடைக்கும் தாவர மூலப்பொருள்களில் இருந்து கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும், தாழம்பாய்களும் தயாரிக்கப்பட்டன.
பாய்களை இன்று பிளாஸ்டிக் கோரைகளால் இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இத்தகைய செயற்கை இழைகளால் ஆன பாய்கள் நம் உடல்நலத்திற்கும், தட்பவெப்பத்திற்கும் ஏற்றதல்ல.
‘பாய்’ என்ற உடன் பலரின் நினைவிற்கு பத்தமடைப் பாய்தான் நினைவுக்கு வருகிறது. பத்தமடைப்பாய்கள் மெல்லிய கோரைகளைக் கொண்டும், பருத்தி நூலைக் கொண்டும், கடினமான உழைப்பைக் கொண்டும் முக நுட்பமான வேலைப்பாடுகளுடன், கலையழகுடன் நெய்யப்படுகிறது.
இத்தகைய பத்தமடைப் பாய்கள் இன்று ஆடம்பரப் பொருள்களாகவும் கலைப்படைப்பாகவும் மாறி விட்டது. இப்பாய்களையும் பத்தமடை என்ற ஊரிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமியச் சமுதாயத்தவர்களால் நெய்யப்படுகிறது.
ஓலைகளால் பாய்கள் பின்னப்படும். கோரைகளால் பாய்கள் நெய்யப்படும். (தமிழனின் கலைச் சொல்லாட்சி எவ்வளவு அருமையாக உள்ளது பார்த்தீர்களா…)
பாய் ஓய்வின் குறியீடு, இல்லற இன்பத்தின் அடையாளம். ‘பாய் விரிக்க புன்னை மரமிருக்க’ என்ற பாடல் வரிகளில் காதல் உணர்வுடன் ‘பாய்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்கள் தான் மகளைக் கட்டிக் கொடுக்கும் போது பலவித சீர் செனத்திகளைக் கொடுக்கிறார்கள். அத்தோடு மறக்காமல் ஒரு பாயையும், தலையணையையும் கொடுக்கிறார்கள். மகளை மருமகனுக்குக் கட்டிக் கொடுக்கிறபோது கூடவே பாயையும் கொடுத்து அனுப்புவதில் வாழ்வியல் சார்ந்த உள்அர்த்தம் வாசகர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
தமிழ்க்கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், இயற்கையோடும் இயைந்த ‘பாய்’ என்ற பயன்பாட்டு அம்சம் நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது.
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இப்படியும் பயன்படுகிறது பாய்
பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.
கோரைப் பாயில் படுத்து உறங்குவது உடல் நலத்திற்கு நல்லதாகும். கோரையினை இரண்டாகக் கிழித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒருவகையான பஞ்சு போன்ற பகுதி இருக்கும். இதில் சிறுசிறு துளைகள் காணப்படும். இது வெப்பத்தினைத் தணிக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலின் வெப்பம் சீராக்கப்படுகிறது; உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. குறைந்த விலைக்கு இக்கோரைப் பாய்கள் கிடைக்கின்றன.
No comments :
Post a Comment