இயற்கையின் அற்புதமான மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்!
கிராமப்புறங்களில் சாதாரணமாகக் காணப்படும் மணத்தக்காளி, தனக்குள் பல மருத்துவ குணங்களை அடக்கியிருக்கிறது. அவற்றை பற்றி பார்ப்போம்....
* மணத்தக்காளி, தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண் பார்வையைத் தெளிவாக்கும், தலைவலி, தோல் நோய் போன்றவற்றைக் குணமாக்கி, மனநல வளத்தை அதிகரிக்கும்.
* சிறுநீர்ப்போக்கைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சு எரிச்சலை அகற்றக்கூடியது. சீதபேதிக்கு மாற்றாகவும் திகழும். மணத்தக்காளிச் செடியின் சாறு, கல்லீரல், கணைய வீக்கம், மூலநோய், பால்வினை நோய், நீர்க்கோர்வை ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
* மணத்தக்காளிப் பூக்கள், இருமல், சளிக்கும் மருந்தாகும். மணத்தக்காளிப் பழங்கள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள், வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றக்கூடியவை. இலையைப் பசை போல அரைத்து, மூட்டுவலிக்கு பற்றாகப் போடலாம். இது, விழிப்படலத்தை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.
* உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்ட மணத்தக்காளி, அவற்றைக் குணப்படுத்தவும் செய்யும், தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை குணமாக, மணத்தக்காளிக் கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலி நீக்கும் மருந்தைப் போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்தால் உடல் வலி நீங்கிவிடும்.
* நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். இது, சிறுநீர்க் கோளாறுகளையும் நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரிய வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாகச் சாப்பிடலாம்.
* மணத்தக்காளிக் கீரையின் சாறு, வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி போன்றவற்றை விரைவாகக் குணமாக்கும். மலச்சிக்கலையும் சீக்கிரமாகச் சரிசெய்யும். மணத்தக்காளிக் கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரைச் சாறு குணமாக்குகிது.
* மணத்தக்காளிக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடும்போது உடலில் பொலிவு கூடும். இதய வலிமை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல்புண் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
* மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவுதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒருவித புளிப்புப்பொருள், செரிமான சக்தியைத் தூண்டி, பசியின்மையை நீக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகளும், காசநோயாளிகளும் இப்பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.
* மணத்தக்காளிப் பழம் மகப்பேறுக்கும் கைகொடுக்கிறது. கரு வலிமை பெறவும், பிரசவம் எளிதாக அமையவும் இப்பழம் உதவுகிறது.
No comments :
Post a Comment