வீட்டைவிட்டு வெளியே வந்தாலே, டென்ஷன். அப்படி எனில், வீடாவது அமைதியைத் தர வேண்டும்தானே? ‘‘இருப்பதோ ரெண்டு ரூம். இதுல, எப்பப் பாரு டி.வி வேற, டென்ஷன் இல்லாமல் இருக்கணும்னா கிராமத்துக்குத்தான் போகணும்’’ என்பார்கள். நகரங்களில் டென்ஷன் இயல்பு, கிராமங்களில்தான் அமைதி கிடைக்கும் என்பது, பொதுவான மனநிலை. வீட்டையே தோட்டமாக மாற்றினால், கிராமங்களின் அமைதியை, நகரங்களிலும் சாத்தியப்படுத்தலாம். அவை மூலிகைத் தோட்டமாக இருந்தால், ஆரோக்கியமும் போனஸ். ஆரோக்கிய வீடுகளுக்கு வழிகாட்டுகிறது இந்தப் பக்கம்…
வெந்தயக் கீரை
10 நாட்களில் வளர்ந்துவிடும். இதை உட்கொண்டால், உடல் குளிர்ச்சி அடையும். அல்சர் பிரச்னை குறையும். மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடித்தால், தொண்டை முதல் குடல் வரை நன்மையை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
புதினா
புதினா இலைகளைப் பயன்படுத்தும்போது, அதன் தண்டுகளைத் தூக்கி எறியாமல், தொட்டியில் நட்டு வைத்தாலே போதும், வளர்ந்துவிடும். புதினாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்தது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி, பசியைத் தூண்டும். புதினா இலையில் டீ தயாரித்தும் அருந்தலாம்.
துளசி / மின்ட் துளசி
உணவு செரிக்காமல் போனால், நான்கு துளசி இலைகளைச் சாப்பிடலாம். செரிமானத்தைத் தரும். பசியைத் தூண்டும். தினமும் ஒரு துளசி இலையை, டீ அல்லது பழச்சாறுடன் கலந்து சாப்பிட, நோய்கள் அருகே வராது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். சளி, இருமல், கிருமித் தொற்று போன்றவற்றைக் குணமாக்கும். துளசி வகையில் ஒன்றான மின்ட் துளசிக்கும் இதே பலன்தான். உடலுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்வையும் தரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
மணத்தக்காளி
மணத்தக்காளி செடியை வெட்டி, தொட்டியில் வைத்தாலே, வளர்ந்துவிடும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குச் சிறந்த மருந்து. நச்சுக்களை நீக்கும். மணத்தக்காளி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை தீரும். நல்ல தூக்கத்தைத் தரும்.
லெமன் கிராஸ்
புல் போன்று இருக்கும் இந்தச் செடியில் ஒரு இலையைக் கிள்ளி, கசக்கி முகர்ந்தால் எலுமிச்சை வாசனை வரும். இதன் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது என்பதால், கொசுக்கள் வீட்டினுள் வராது. உணவு செரிக்காமல் அவதிப்படுவோர், லெமன் கிராஸை வெந்நீரில் போட்டு, கஷாயமாகக் குடிக்க, உடனடி பலன் கிடைக்கும். பால் கலக்காத டீயில் சேர்த்துக் குடிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.
கொத்தமல்லி
நாட்டு தனியாவை தரையில் தேய்த்து, பின், மண்ணில் புதைத்தால் 10 நாட்களிலே கொத்தமல்லி வளர்ந்துவிடும். தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். கொத்தமல்லியைச் சாறாகவோ,கஷாயமாகவோ குடித்தால், நச்சுக்கள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகி, பலப்படும். பூஞ்சைத் தொற்றுக்களைப் போக்கும். கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேன் கலந்து, பூசினால் சருமத் தொற்றுக்கள் குணமாகும்.
கற்றாழை
இளமையைப் பராமரிக்கும் மூலிகை. சருமத்தின் மிகச்சிறந்த மாய்ஸ்சரைசர். தோல் சீவி, கற்றாழையின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து, நன்றாகக் கழுவி, மோர் அல்லது கருப்பட்டியுடன் சாப்பிட்டுவர, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் தீரும். உடல் வெப்பம், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும். சைனஸ், ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள், கற்றாழையைச் சருமத்திலோ, கூந்தலிலோ பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.
கற்பூரவல்லி
குழந்தைகள் இருக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை. அடிக்கடி சளி, இருமல், நெஞ்சுச் சளி வந்தால், கொழுந்து இலையாகப் பறித்து, ஒரு கல் உப்புடன் கலந்து மெல்லலாம். காலை வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டால், தூங்கவிடாமல் சளி வந்துகொண்டே இருக்கும்.
பிரண்டை
மூலநோய், மூட்டுப் பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து. வளர்க்க எந்தவிதப் பராமரிப்பும் தேவை இல்லை. பிரண்டையை, நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கிச் சாப்பிட வேண்டும். வயதானவர்கள் இருக்கும் வீட்டில், பிரண்டைச் செடி அவசியம் இருக்க வேண்டும்.
அருகம்புல்
உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது ஒரு எனர்ஜி பூஸ்டரும்கூட. காலையில் ஜூஸாகக் குடித்துவர, வயிறு சுத்தமாகும். நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். ரத்தசோகைப் பிரச்னை தீரும்.
கீழாநெல்லி
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். அடிக்கடி சாப்பிடக் கூடாது. மாதம் இருமுறை சாப்பிடலாம். சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் வராமல் இருக்கும் தொந்தரவுக்கு, கீழாநெல்லி சூப் சாப்பிடலாம். அதிகக் கசப்புச் சுவை கொண்டது. கல்லீரலைச் சுத்தம் செய்யும்.
தூதுவளை
இந்தக் கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு, பற்கள் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். இருமல், சளி, ஆஸ்துமா இருப்பவர்கள், ரசமாகச் செய்து குடிக்கலாம். கை, கால் நடுக்கத்துக்கு அருமருந்து. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.
வெற்றிலை
வெற்றிலையை வளர்க்க கொஞ்சம் ஈரப்பதம் அவசியம். செரிமானத்துக்கு உதவும். உணவில் துவர்ப்புச் சுவை இல்லாததை உணவுக்குப் பிறகு, சாப்பிடும் வெற்றிலை ஈடு செய்யும். பூச்சிகள் கடித்தால், வெற்றிலையும் மிளகும் சேர்த்துச் சாப்பிட, விஷத்தை முறிக்கும்.
திருநீற்றுப்பச்சிலை
சருமத்தில் ஏற்படும் புண்களுக்குச் சிறந்த மருந்து. பெரிய அளவில் சீழ் கோர்த்த கட்டிகள், விஷப் புண்களையும் சரியாக்கும். திருநீற்றுபச்சிலையைக் கசக்கி, பருக்கள், கட்டிகளின் மேல் தடவலாம். இலைகளை மிக்ஸியில் அரைத்தால், அதன் சூடும் வேகமும் சத்துக்களை நீக்கிவிடும். உரலில் இடித்து, சாற்றை சருமத்தில் பூச வேண்டும்.
சிறியாநங்கை
சிறியாநங்கைச் செடியை வளர்த்தால், விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வராது. ஏதாவது விஷக்கடி ஏற்பட்டாலும், அதன் மேல் சிறியாநங்கையின் இலைகளைக் கசக்கித் தேய்க்கலாம். இந்த இலைகள் கசப்புச் சுவையைத் தரும். இரண்டு நாள் வரை அந்தக் கசப்பின் சுவை நாக்கிலே இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
Thanks - Doctor Vikatan