‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே! உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது”
- நம்மாழ்வார்.
நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசி போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்படுகின்றன.
ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை, இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவருகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான், இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன. ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி இருந்தது.
நிலம், நீர், காற்று மாசு அடைவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்; மனிதர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கி, பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், சென்னை லயோலா கல்லூரியில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கடந்த வாரம், ‘ஐம்பூதச் சுற்றுச்சூழல் திருவிழா’ அமர்க்களமாக நடந்தது.
தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் குறித்தும், சுற்றுச்சூழல் சார்ந்தும் விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்விதமாக நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவில், இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவே ஆரோக்கியமானது என்று விளக்கும் வகையில், சிறுதானிய விருந்தும் நடந்தது.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு, விருந்தில் பரிமாறப்பட்ட ருசிமிகுந்த சிறுதானிய உணவுகளை, அனைவரும் வீட்டிலேயே செய்து, ருசித்து, ஆரோக்கியம் பெற, ‘டாக்டர் விகடன்’ இணைப்பாக வழங்குகிறோம்.
சிறந்த சிறு தானியச் சிற்றுண்டிகளை வழங்கியிருக்கிறார், சித்த மருத்துவர் கு. சிவராமன். அதோடு, இதில் இடம்பெற்ற மற்ற உணவு வகைகளைப் படைத்தவர், திருமணங்களுக்கும், விழாக்களுக்கும் நமது பாரம்பரிய உணவைச் சமைத்துத் தரும் ராஜமுருகன். உணவக மேலாண்மை மற்றும் கலை அறிவியல் படித்துவிட்டு, சிறுதானிய உணவின் மீது உள்ள அக்கறையில், முழுமூச்சாக இறங்கிவிட்டார் இந்த இளைஞர். இந்த உணவுகளில் பயன்படுத்தியுள்ள சிறுதானியங்களின் பலன்களை, நமக்கு விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.
மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில், சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை, நாம், நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவோம். அடுத்த தலைமுறையை, ஆரோக்கியமுள்ள தலைமுறையாக உருவாக்குவோம்.
No comments :
Post a Comment