ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று காவலில் வை, சிறைப்படுத்து. மற்றொன்று ஒரு வழக்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி மறு விசாரணைக்கு உத்தரவிடு என்பது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு தான் வாரண்ட்.
குற்றமிழைத்தவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல் துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை கலைத்து விடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.
அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அவர் தப்பித்து ஓடி விடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்தர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்து விடமுடியாது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right under Article 19(1)(d) of the Constitution of India). ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக்கூடாது. காவல் துறையினரேகூட எல்லா விதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable offence அதாவது புலன் கொள் குற்றம்/பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல் துறையால் சம்மந்தப்பட்ட குற்றாவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யமுடியாது. இதுவே Non-cognizable offence, அதாவது புலன் கொள்ளா குற்றம்/பிடி ஆணை தேவைப்படும் குற்றம் நடைபெற்றால் காவல்துறை அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Jurisdictional Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்யமுடியும்.
எதுவெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் எது புலன் கொள் குற்றம், எது புலன் கொள்ளா குற்றம் என்பதும், எது ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் அல்லது எது ஜாமீனில் விட முடியாத குற்றம் என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறை தண்டனை வழங்கப்படக்கூடிய (மரண தண்டனை உட்பட) குற்றங்கள் எல்லாம் cognizable offence என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் non-cognizable offence என்று அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன விதிமுறையில் விதிவிலக்குகளும் உண்டு. உதாரணத்துக்கு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்துக்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவாகத்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள், அடல்ட்ரி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால் இது போன்ற குற்றங்களை Non- cognizable குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.
இன்னொன்று தெரியுமா? காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் என்பதில்லை.பொதுமக்களில் யாரேனும் ஒருவரோஅல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆக, கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திரமாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதே ஆகும்.
குற்றவாளியைக் கைது செய்கிறேன் பேர்வழி என்று குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இது பொது மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறைக்கும் பொருந்தும். ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைதான் பிரயோகிக்கவேண்டும். யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்ல பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். ஜாக்கிரதை!
காவல் துறையினர் வாரண்ட்டை நிறைவேற்றும் போது (குற்றவாளியைக் கைது செய்யும் பொழுது) குற்றம் சாட்டப்பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல் துறையினருக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும். வாரண்டை நிறைவேற்ற விடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகும்.