Community, Income, and Residential Certificates.
சாதி,வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், இம்மூன்றையும் ஒரே விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவை மூன்றும் எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. நாம் இங்கு இம்மூன்றையும் தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில் பார்ப்போம். வருமானச் சான்றிதழ், பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக்கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.
இந்த வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அதற்கென உள்ள விண்ணப்பத்தில் சரியான நீதிமன்ற வில்லைகள் ஒட்டி, அதனுடன் மனுதாரர் வாக்குமூலத்தையும் இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
இந்த விண்ணப்பத்தை இங்கே பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
ஆண்டு வருமானம் பன்னிரெண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரெண்டுக்கும் நீதிமன்ற வில்லை ஓட்ட வேண்டும். தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஓட்ட வேண்டியது இல்லை.வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார். ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டலத் துணை வட்டாட்சியர்களும், அதற்கு மேல் ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர். இச் சான்றிதழுக்காக அரசு அளித்துள்ள விண்ணப்பப் படிவமும் முழுமையாக இல்லை. அதில் இன்னும் கூடுதல் வினாக்கள் இடம்பெறவேண்டும். உதாரணமாக, விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எவருக்கேனும் வருமானம் இருந்தால் அதைக் குறிக்க எந்த வசதியும் இல்லை. குறைந்தது, 'கூடுதல் தகவல்களுக்கு கூடுதல் தாள்கள் இணைக்கவும்' என்ற குறிப்பாவது இருக்க வேண்டும், அல்லது விளக்கமாக, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் வருமானம் பெறும் உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் வயது, வருமானத்திற்கான காரணிகள் என்று சில கேள்விகள் இடம் பெறலாம். இதனால், பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து, சான்றிதழ் பெறத் தேவையான, மேலும் விவரங்களை அளிப்பது வரை மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
வருமானம் என்பது மாறும் தன்மையுடன் இருப்பதால், வருமானச் சான்றிதழ் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. எப்பொழுது என்ன காரணத்திற்காக வருமானச் சான்றிதழ் வாங்கப்படுகிறதோ, அப்பொழுது அந்தக் காரணத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். பிறகு மீண்டும் வேண்டுமென்றால், இன்னொரு முறை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
என்னைப் பொறுத்தளவில், வருமானச் சான்றிதழ் வாங்கும் தேதி, வருமானம் உள்ளிட்ட தகவல்களை, விண்ணப்பதாரரின் ஏதாவது ஒரு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, குடும்ப அட்டையில் பதிவுசெய்யலாம். ஏனென்றால், பொதுமக்களில் சிலர், அரசிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால், குறைந்த அளவு வருமானத்தையும், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அதிக வருமானத்தையும் குறிப்பிட்டுச் சான்றிதழ் கேட்கின்றனர். இது அரசை முற்றிலும் ஏமாற்றுவதோடு இல்லாமல், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களையும் ஏமாற்றுவதாகும். வருமானச் சான்றிதழ் வழங்கும் போது, அதைத் தகுந்த வகையில் பதிவு செய்யும்பொழுது, அதே நபர் மீண்டும் வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், முந்தைய விண்ணப்பத்திற்கும் தற்போதைய விண்ணப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து, அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து, ஏமாற்றுவதைத் தவிர்க்கலாம்.
No comments :
Post a Comment