பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று சொன்னால்? சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னாள் தங்களது மருத்துவ அவசர கால இயக்கூர்தி எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை; மாறாக, எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம். இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். எனவே, பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்நாட்டில் உள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைய்ல் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இறப்பும் அவ்வாரே பதிவு செய்யப்படவேண்டும். ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வான் ஊர்தியில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வான் ஊர்தி அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்கு தான் பதிவு செய்யவேண்டும்.
No comments :
Post a Comment