25 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட இதுவரை சேரவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 538 உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் மாணவ-மாணவிகள் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த வருடம் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விளையாட்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு முதலில் நடத்தப்பட்டது. பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. பின்னர் பொது கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு தினமும் நடந்து வருகிறது.
கலந்தாய்வில் மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் பிரிவை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள மாணவ-மாணவிகள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டபடி இருக்கிறார்கள். மொத்தத்தில் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மேல் கலந்து கொள்கிறார்கள். கலந்தாய்வு இந்த மாத இறுதிவரை நடக்கிறது.
இதுவரை கலந்தாய்வுக்கு 55 ஆயிரத்து 801 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 18 ஆயிரத்து 725 பேர் வரவில்லை. வராத மாணவ-மாணவிகளின் சதவீதம் 25 ஆகும்.
மெக்கானிக்கல் பிரிவு முதல் இடம்
கடந்த பல வருடங்களாக மாணவ-மாணவிகள் அதிகம் விரும்பும் பிரிவாக எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இருந்தது. அந்த பிரிவை ஏராளமானவர்கள் எடுத்ததால் அதுதான் முதல் இடத்தில் இருந்தது. கடந்த வருடம் கலந்தாய்வின் கடைசியில்தான் மெக்கானிக்கல் பிரிவு முதல் இடத்திற்கு வந்தது.
ஆனால் இந்த வருடம் இப்போதே மெக்கானிக்கல் பிரிவு முதல் இடத்திற்கு வந்துவிட்டது. 11 ஆயிரத்து 574 பேர் மெக்கானிக்கல் பிரிவை எடுத்துள்ளனர். 11 ஆயிரத்து 339 பேர் தான் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.
எனவே இந்த பிரிவு 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 7 ஆயிரத்து 716 பேர்களும், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை 6 ஆயிரத்து 785 பேர்களும், சிவில் பிரிவை 6 ஆயிரத்து 652 பேர்களும் எடுத்துள்ளனர்.
25 கல்லூரிகளில் யாரும் சேரவில்லை
கலந்தாய்வு தொடங்கி 17 நாட்கள் முடிந்து விட்டன. ஆனால் 25 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதுபோல பல கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 10 பேர்களுக்குள் தான் உள்ளன. இந்த 25 கல்லூரிகளில் கலந்தாய்வு முடியும் நேரத்தில் சில மாணவர்கள் சேருவார்கள் என்று தெரிகிறது.
கட்டிடக்கலை
கட்டிடக்கலைக்கான கலந்தாய்வு 19-ந்தேதி நடக்கிறது. தொழில்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடக்கிறது.
இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments :
Post a Comment